தமிழர்களை எதிர்க்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக இன்று (6) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தேரருக்கு எதிராக தாம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, குறித்த தேரருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் தனுக்க ரணன்ஞக குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களை எதிர்க்கும் தேரர்
மட்டக்களப்பு வாழ் சிங்களவர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டிய அம்பிட்டிய சுமனரத்தன தேரர், அண்மை நாட்களில் தமிழர்களுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு, அவர்களை வெட்டுவதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன், சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைகளை காவல்துறையினர் எதிர்க்காமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், காவல்நிலையத்துக்கு சென்று குழப்ப நிலையையும் உருவாக்கியிருந்தார்.
இந்த நிலையில், காவல்துறையினரை எதிர்த்து குரல் எழுப்பிய அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக, காவல்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமை குறித்து தாம் கவலையடைவதாக தனுக்க ரணன்ஞக தெரிவித்துள்ளார்.