இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் மோசடிகளைக் கண்டறிய புதிய திட்டம்
பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளே நேரடி இழப்புகளுக்கு முக்கிய காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த மோசடிகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் மோசடி

இலங்கை போக்குவரத்து சபைக்கு வர வேண்டிய வருமானத்தில் ஒரு பகுதியை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாகவும், இது அன்றாட நடவடிக்கை எனவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளதோடு, நாளொன்றுக்கு பெற வேண்டிய 100 இலட்சம் ரூபாவை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய பின்னர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறும், பயணச்சீட்டு கிடைக்காவிட்டால் புதிய முறைமையின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.