அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச குழு: அமெரிக்கா - ஈரான் இடையே முரண்பாடு
ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கான சர்வதேசக் குழுவை அமைப்பதற்காக அதிகாலையிலேயே தாங்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அணுசக்தி நிலையங்களைக் கண்காணிப்பதற்கும் சோதனையிடுவதற்கும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்களின் வருகைக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார்.
கருத்து முரண்பாடு
இருப்பினும் அமெரிக்கத் தலைவர்களின் இந்தக் கூற்றை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆய்வாளர்களின் வருகை குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் அமெரிக்கா கூறுவது போன்றதொரு சூழல் தற்போதைக்கு இல்லை என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஈரானுக்குள் நுழைவது குறித்துக் கருத்து தெரிவித்த ட்ரம்ப், அவர்கள் தகுந்த நேரத்தில் உள்ளே செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போதைய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பதற்காக 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறுகிய காலத்திற்குள் சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரதானப் பிரச்சினைகளுக்கும் இரு நாடுகளும் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த ஆய்வாளர் விவகாரம் தற்போதைய பேச்சுவார்த்தையில் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |