ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய சிறுநீரக நோயாளியை தாக்கிய நடத்துனர்
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலை உயர்வால் பேருந்துகளுக்கான கட்டணமும் உயர்ந்து செல்கிறது.
இதனால் பயணிகள் பாடு படு திண்டாட்டமாகவே உள்ளது. நாளாந்தம் பணிக்கு செல்பவர்கள்,பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் இதர சேவைகளுக்கு செல்பவர்கள் என அனைவரும் கட்டண அதிகரிப்பால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 72 வயதுடைய சிறுநீரக நோயாளர் ஒருவர் பஸ் பயணச்சீட்டுக்கு ஒரு ரூபாவுக்கும் குறைவாக பணம் செலுத்தியதால் ஆத்திரமடைந்த நடத்துனரால் தாக்கப்பட்டு பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொலனறுவை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் பயணியை தாக்கியுள்ளதுடன், பேருந்தில் பயணித்த ஒருவர் நோயாளியை பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞர் பொலனறுவை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், பஸ் நடத்துனர் பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையகப் பொறுப்பதிகாரி எச். ஜி. சி. பி. விஜேவீர தெரிவித்தார்.
நுவரகல திம்புலாகலைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார். அவரது மனைவி பார்வையற்றவர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக பொலனறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கு தனியாகச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறிய அவர், பஸ் கட்டணத்தை செலுத்திய பின்னர் தாக்கப்பட்டுள்ளார்.
இவர் கதுருவெலயிலிருந்து சிறுநீரக வைத்தியசாலைக்கு செல்வதற்காக நடத்துனரிடம் 30 ரூபாவை செலுத்தியுள்ளார்.
காயமடைந்த சிறுநீரக நோயாளி பொலனறுவை பொது வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

