அரச தலைவர் தலைமையில் அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் தேசிய மாநாடு
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 9ஆவது தேசிய மாநாடு, இன்று (16) பிற்பகல், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya) தலைமையில், கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ச மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இது, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 9ஆவது தேசிய மாநாடு மற்றும் வருடாந்தத் தேர்தல் என்பன இன்று இடம்பெற்றதோடு, “பசுமை ஆசிரியர்” என்ற இணையத்தளத்தின் திறப்பு விழா மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நால்வருக்கும் உறுப்பினர் ஒருவருக்குமான நினைவுச் சின்னங்களைக் கையளிக்கும் நிகழ்வுகள், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன.
அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி அமித் புஸ்ஸெல்ல மற்றும் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் இணைந்து, அரச தலைவருக்கு நினைவுச் சின்னமொன்றைக் கையளித்தனர்.
அமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சிசிர ஜயகொடி, சீதா அரம்பேபொல, நாடாளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்னசேகர, வசந்த யாப்பா பண்டார ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.









