ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் -உக்ரைன் இராணுவமிடையே வெடித்தது மோதல் (படங்கள்)
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் இராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் இரண்டு உக்ரேனிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
டோனட்ஸ்க் நகரில் காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் டோனட்ஸ்க் மக்கள் குடியரசு என்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி படித்து வரும் சிறுவர்கள், பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் குடும்பத்துடன் டோனட்ஸ்க் நகரை காலி செய்து வருவதால், அங்குள்ள பெற்றோல் நிலையங்களில் கார்கள் நீண்ட தூரத்துக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டோனட்ஸ்க் நகரில் இருந்து மட்டும் ஏழு இலட்சம் பேரை, ரஷ்யாவுக்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


