வரிகளால் அதிரடி காட்டிய ட்ரம்ப்: நிறுத்தப்பட்ட ஏழு பேரழிவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை ஏழு போர்களை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
லண்டன் பயணத்தை முன்னிட்டு அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவின் டிக்-டாக் குறித்து அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் உள்ளதாகவும், அதனை உறுதி செய்வதற்காக சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம், கடந்த கால வர்த்தக ஒப்பந்தங்களை விட வித்தியாசமானதாய் அமையும் என்றும், இரு நாடுகளுக்கும் மிகச்சிறந்த வணிகத்தை உருவாக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
செல்வந்த நாடாக அமெரிக்கா
மேலும், அமெரிக்காவிடம் மிகப்பெரிய நிறுவனங்கள் இருப்பதால், உலகின் பிற நாடுகளை விட செல்வந்த நாடாக அமெரிக்கா உருவாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“வரி விதிப்பில் பேரம் பேசும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. நான் வரி விதிப்பின் மூலம் 7 போர்களை நிறுத்தியுள்ளேன். அதில் 4 நாடுகளுடன் இன்றும் அமெரிக்கா வணிகம் செய்து வருகிறது” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் ஜனாதிபதி விளோடிமீர் ஜெலென்ஸ்கியும் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தீர்க்கப்பட்டவுடன், அமெரிக்காவின் வரி விவகாரங்களும் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
