இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் இருந்த சதி... அம்பலப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்
இலங்கை அணியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணமென இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவின் பெங்களூரில் இருந்து இன்று (10) அதிகாலை 05.05 மணிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-174 இல் நாடு திரும்பியுள்ளது.
விமானநிலையத்தினை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் வீரர்களை பலத்த பாதுகாப்புடன் தனி வாகனங்களில் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தோல்விக்கான காரணம்
இதன்போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, போட்டிகள் தோல்விக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
போட்டியின் தோல்விக்கு அணிக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் 02 நாட்களில் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியினை தான் பொறுப்பேற்பதாகவும்,வீரர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை என்றும், இதற்குப் பின்னால் குறிப்பிட்ட குழுவொன்றின் சதி இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றிருந்தது.