இளங்குமரன் எம்.பி மீது சுமந்திரன் வழக்கு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கஜபாகு ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இளங்குமரன் எம்.பி. சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாமர நாணயக்கார கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியமையால் வழக்கு பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பாக நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அகதி தஞ்சம் கோரிய விவகாரம்
இதன்போது இளங்குமரன், கஜபாகு ஆகியோர் நீதிமன்றத்தில் முற்பட்டிருந்தனர். மனுதாரரான சுமந்திரன் சார்பாக சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முற்பட்டிருந்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29 ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்த நிலையில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சின்னையா சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக எம். ஏ. சுமந்திரன் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
நீதிவான் சின்னையா சிறிலோகநாதனை விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார்.
சுமந்திரன் காரணம்
இதற்கு மறுநாள் இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் பிறிதொரு சட்டத்தரணி ஊடாக மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து இளங்குமரன் எம். பி. உள்ளிட்டோர் சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு சுமந்திரன் காரணம் என்ற சாரப்படத் தெரிவித்த கருத்துகளை அவதானித்து சுமந்திரன் இளங்குமரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 19 மணி நேரம் முன்