வடக்கில் இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியுள்ளது.
அதன்படி, முத்துஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவில் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடிக்கு வான் பாய்வதனால் முத்துயன்கட்டு, பேராறு , முத்துவினாயகபுரம், பண்டாரவன்னி, வசந்தபுரம், மன்னகண்டல் ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் வீதியில் பாய்வதால்
இதேவேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதால் வீதிப் போக்குவரத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், மதவளசிங்கன்குளம் இரண்டு அடி வான் பாய்வதனால் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு, முறிப்ப பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேபோன்று தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர், இதனைவிடவும் வட்டுவாகல் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வவுனிக்குளம் வான் பாய்வதால் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதனைவிட பாலியாறு பெருக்கெடுத்து பாய்வதால் சிறாட்டிக்குளம் மக்கள் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம், கொக்காவில் வீதியில் மருதங்குளம், ஐயன்கன்குளம் வான் பாய்வதாலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது, தவிரவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புளியமுனை விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாது வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் படகு சேவை மூலம் மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,126 குடும்பங்களை சேர்ந்த 3,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |