சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் - ரணில் விக்ரமசிங்க
“நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட " சமையல் கலை உணவு கண்காட்சி 2023" இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டங்கள்
இலங்கை செஃப்ஸ் ஃபோரம் ஆண்டுதோறும் சிறிலங்கா முழுவதும் உள்ள சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் உணவு கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், இவ்வருட கண்காட்சியானது 88 தயாரிப்பு மற்றும் சேவை நிலையங்களை உள்ளடக்கியிருந்ததுடன், அவற்றை அவதானிக்க அதிபரும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது. கண்காட்சியில் பங்குபற்றிய சமையல் கலைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
மேலும் அவர், இத்துறையின் முன்னேற்றத்திற்காக சமையல் பாடசாலையொன்றை ஸ்தாபித்தல், சமையற்காரர்களை தரவரிசைப்படுத்துவதற்கான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
