சுமந்திரனை நாங்கள் அழைக்கவேயில்லை! கரடியே காறித் துப்பிய கதை!
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அருகே அமர்ந்திருந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.
அது மாத்திரமல்ல, மறுநாள் ஒரு சில தமிழ் ஊடகங்களில், சுமந்திரன் தமிழருக்கான தீர்வு பற்றி பல விடயங்களை ஜே.வி.பி தலைவருடன் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் கூடத்திற்கு சுமந்திரன் அழையா விருந்தாளியாகவே சென்றதாக யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. தெரிவித்ததுதான்.
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இதுபற்றிக் கூறுகின்றபோது, 'நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி வழங்கவில்லை. தானாகவே மாநாட்டுக்கு வந்தார்.
ஆனால் வந்த சுமந்திரன் எமது கட்சியின் தலைவர் அனுரகுமாரா திசாநாயக்கவிடம் இந்தியாவைப் போல் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் நமது கட்சியின் தலைவருக்கு கூறியதாக செய்திகள் வெளிவந்ததாக அறிந்தோம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நாம் தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் .ஆனால் தனி நபர்களை அழைத்து அரசியல் செய்யும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை' என்று கூறியிருந்தார்.
அதாவது மக்கள் சக்தியின் அந்தக் கூடத்திற்கு சுமந்திரன் அழையா விருந்தாளியாகவே சென்றிருந்ததாகவும், தமிழர் பிரச்சினை பற்றி அங்கு சுமந்திரன் பேசவேயில்லை என்றும் ஜே.வி.பியின் யாழ் அமைப்பாளர் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்கள் ஏற்காத, ஏற்கவிரும்பாத ஒரு தென் இலங்கைக் கட்சிதான் ஜே.வி.பி.
அப்படிப்பட்ட ஜே.வி.பியின் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக யாழ் மக்களின் பிரதிநிதியான ஒருவர் சென்றது என்பதும், அப்படி அவர் சென்றதை அந்த ஜே.வி.பியே விமர்சித்தது என்பதும் உண்மையிலேயே வெட்கக்கேடான ஒரு விடயம்.
சுமந்திரனுக்கு இந்தச் செயல் வெட்கமாக இருக்கின்றதோ இல்லையோ, சுமந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ் மக்கள் சுமந்திரனின் இந்தச் செயலால் வெட்கப்பட்டு நிற்கின்றார்கள் என்பது உண்மை.