‘அப்பா வீட்டில இல்லையாம்’ பாணியில் சுமந்திரன் அளித்த பதில்!!
கடன்கொடுத்தவர் அறவிடுவதற்காக வீடு தேடி வருகின்றபோது வீட்டுக்குள் மறைந்து கொண்டு; ‘அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு’ என்று பிள்ளையிடம் கூறி அனுப்ப, பிள்ளை வாசலுக்குச் சென்று ‘அப்பா வீட்டில இல்லையாம்..” என்று கூறி மாட்டிவிடுவதுபோன்ற ஒரு சம்பவம் சுமந்திரனுக்கு நடந்திருக்கிறது.
‘சுமந்திரனுக்கு நடந்திருக்கிறது’ என்று கூறுவதை விட, ‘சுமந்திரனால் நடந்திருக்கிறது’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் வழக்குத்தாக்கல்செய்து தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு சந்திசிரிச்ச சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரனே இருந்ததாக அந்தக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இந்த நிலையில், சுமந்திரனை இந்த விடயம் தொடர்பாக ஒரு உள்ளூர் ஊடகம் செவ்விகண்டிருந்தது.
அந்தச் செவ்வியின் போது கூமந்திரன் ஒன்றுடன் ஒன்று முரன்பட்ட இரண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
‘வழக்குக்காக கட்சியின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எந்தவித நியாயமும் இல்லை… கட்சி சரியாகத்தான் செயற்பட்டிருக்கின்றது.. … அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது...’ என்று கூறியிருந்தார்.
அதன்பின்னர் வழக்குத் தொடுநர் பற்றிய கேள்வி வந்தபோது..’ அவர் வழக்குத் தொடுத்தது சரிதான்.. அவர் நியாயமாகத்தான் செய்திருக்கிறார்..’ என்றும் கூறுகிறார்.
சுமந்திரன் பற்றி கட்சிக்காரர்கள் இந்த இடத்தில்தான் வினா எழுப்புகின்றார்கள்.
கட்சி சரியாகத்தான் செயற்பட்டிருக்கின்றது.. கட்சி மீது போடப்பட்ட வழக்கு பிழையாகப் போடப்பட்டிருக்கின்றது என்று சுமந்திரன் கூறுவது உண்மையானால், அந்த வழக்கைப் போட்ட நபர் செய்தது தவறான ஒரு விடயமாகத்தான் இருக்கவேண்டும்.
அப்படியானால் வழக்குத் தொடுத்த அந்தக் கட்சிக்காரர் மீது சுமந்திரனுக்கு கோபம் வந்திருக்கவேண்டும்.
ஆனால் சுமந்திரனுக்கோ அந்த நியாயமான கோபம் வரவேயில்லை.
மாறாக வழக்குப் போட்டவரை அவர் மறைமுகமாகப் பாராட்டவும் செய்கின்றார். அவர் செய்தது சரிதான் என்று பொருள்படவும் கூறுகின்றார்.
ஒருவேளை அந்த வழக்குப் பற்றி கட்சிக்காரர்கள் சொல்வதுதான் சரியாக இருக்குமோ??