நிமல் சிறிபால டி சில்வாக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது..!
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை சற்றுமுன்னர் அதிபர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. .
ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியாதாக முன்வைக்கப்படட குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று கடந்த தினம் நியமிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கைக்கு அமைவாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.
விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு அதிபர் அறிவித்திருந்த நிலையில் குறித்த அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாக்கு எதிராக இன்று பதிவான முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு ஓன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எஸ். எம். நிஷார் மௌலானா என்ற நபரே இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜப்பான் தைசி (Taisei) நிறுவனத்திடம் 200 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
