கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது
கொழும்பிலிருந்து பயணித்த ஒரு தம்பதியினர் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மும்பை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைதானது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய தம்பதியினர் மும்பையைச் சேர்ந்த முகமது சவுத் சித்திக் (29) மற்றும் சஹாசனா சித்திக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள்
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்கத் துறையின் வான் புலனாய்வுப் பிரிவுக்கு (AIU) தம்பதியினர் தங்கள் டிராலி பையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, அதிகாரிகள் அவர்களின் பைகளை சோதனை செய்தபோது, சீல் வைக்கப்பட்ட மூன்று பைக்கற்றுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கள சோதனை
அதன்படி, கள சோதனை கருவியைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்ட 5 கிலோ பொருள் ஹைட்ரோபோனிக் களை (கஞ்சா) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோத சந்தையில் அதன் மதிப்பு சுமார் 5.45 கோடி ரூபாய் (இலங்கை ரூபாய் 18 கோடி) என்று சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு இலவச பயண வசதியை அடையாளம் தெரியாத ஒருவர் தங்களுக்கு வழங்கியதாகவும், கொழும்பிலிருந்து மும்பைக்குத் திரும்பிய போது, அதே நபர் தங்களை அழைத்து சொக்லெட்டுகள் அடங்கிய பொதி என்று நம்பப்படும் ஒன்றைக் கொண்டு வரச் சொன்னதாகவும் தம்பதியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதியில் கஞ்சா இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், அது தடைசெய்யப்பட்ட பொருள் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
