யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதிய இணைப்பு
யாழ். (Jaffna) அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் (28.02.2025) இரண்டாவது தடவையாக நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார்.
தனிப்பட்ட புதைகுழி
குறித்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து முதற்கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
அத்துடன் 2 அடி ஆழத்துக்கு கீழே தான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்படுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
அந்தவகையில் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இது குறித்து தனது ஆய்வினை செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதிவான், முதற்கட்டமாக ஸ்கான் மூலம் ஆய்வினை செய்வதாகவும், அந்தவகையில் 04.03.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் இடம்பெறும் எனவும், காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகள் - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் (28.02.2025) யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதிகாரியின் அறிக்கைகள்
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து நீதிவான் குறித்த இடத்துக்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்தார்.
இதன்போது சட்ட மருத்துவ அதிகாரி தடயவியல் காவல்துறையினர், நல்லூர் பிரதேச செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிகாரியின் அறிக்கைகள்
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படுவதாக இருந்தது.
எனினும் நீதிமன்றுக்கு நீதிவான் சமுகமளிக்காதமையால் வழக்கை விசாரித்த பதில் நீதிவான் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகள் - கஜிந்தன்
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
