வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம்
சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நல்லதோ கூடாதோ தேசிய ரீதியான அரசு இருக்க வேண்டும். அரசை வீழ்த்துவது பாவமான செயற்பாடு. சியாரா லியோனில் அவ்வாறு இடம்பெற்றது. ஹைய்ரில் அவ்வாறு இடம்பெற்றது.
வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி
இந்த போராட்ட களத்தில் இருப்போர், ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்று சர்வதேச தலையீட்டை கோரியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநாட்டிற்கு சென்று, வடக்கு கிழக்கிற்கு வெளிநாட்டு படையினரை கோரியுள்ளார். இவ்வாறு நடந்தால், அதற்கு இடமளித்தால், இன்னும் சில நாட்களில் வடக்கில் உள்ள இராணுவ முகாமிற்கு சென்று, அனைத்தையும் அகற்றிக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.
வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கு சென்று முகாம்களை அகற்றுமாறு போராட்டகாரர்கள் கூறுவார்கள். அவ்வாறான போராட்டத்திற்கே சிலர் தூய்மை பட்டம் கொடுகின்றனர்.
நான் ஆவணமொன்றை சமர்ப்பிக்கின்றேன். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனத்துடன் இணைந்த என்.ஈ.டி என்ற ஜனநாயகத்திற்கான தேசிய நன்கொடை நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் 100 நாடுகளில் இயங்குகின்றது. 2020 ஆம் ஆண்டு மாத்திரம் நீதி மற்றும் சமூக விடயங்களை அடிப்படையாக கொண்டு ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 670 டொலரை வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையத்திற்கு 02 இலட்சத்து 85 ஆயிரம் டொலர் நிதியை கடந்த 2020 ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் வழங்கியுள்ளது.
அமெரிக்க நிதி உதவி
யு.எஸ் அய்ட், சி.எஸ்.ஐ, ஆர்.ஓ.எல் போன்ற செயற்றிடடங்களுக்கும் அமெரிக்க நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிதி சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு அருகில் சென்று நீங்கள் யுத்தக் குற்றங்களை செய்திருப்பீர்கள் என கூறுகின்றனர். உங்களை விட பிரபாகரன் சிறந்தவர் என கூறுகின்றனர். இந்த இராணுவத்தை இவ்வாறு கூற முடியுமா?அனைத்து நேரங்களிலும் மக்களுடன் இருக்கும் இராணுவத்திற்கும் தற்போது தடையை ஏற்படுத்துகின்றனர். இராணுவத்தின் வீடுகளை கண்டறிந்து தீ வைக்க வேண்டும் என ஒரு மூதாட்டி கூறுகின்றார். இதன்மூலம் உளவியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது அரசை வீழ்த்துவதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.
அரசியலமைப்புக்கு புறம்பாக அதிகாரத்தை உருவாக்க வேண்டும்
ஒரு கட்சியின் தலைவர் கூறுகின்றார் அரசியலமைப்புக்கு புறம்பாக அதிகாரத்தை உருவாக்க வேண்டும் என. அது சிறந்ததாக இருக்கும். இதுவே மறைமுகமாக இருக்கும் நிகழ்ச்சி நிரல், அரசை வீழ்த்தி, அநீதியான அதிகாரம் உருவாக்கப்படும். நாடு வீழ்ச்சி அடையும். அதன்பின்னர் வடக்கு கிழக்கை பிரிப்பார்கள். இதுவே திட்டம், இந்த திட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம். இந்த திட்டத்திற்கு இடமளிக்க கூடாது. அதற்காக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினர் மற்றும் காவல்துறையினருக்கு ஒன்றை கூறுகின்றோம். அரசை பாதுகாக்கவும்,அதற்காக முன்நிற்கவும். நீங்கள் எம்மை பாதுகாக்க வேண்டாம். அரசை வீழ்த்தும் திட்டத்தை முறியடியுங்கள். அதற்காக நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்றார்.