சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொரோனா கொத்தணி?
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட 1200 பிசிஆர் சோதனைகளில் 474 பேருக்கு கொவிட்தொற்று உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொழிற்சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 400 தற்காலிக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் பொது சுகாதார ஆய்வாளர்கள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்கள் இந்த செயல்பாட்டின் போது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, பொது சுகாதார பரிசோதகர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சீரற்ற அன்டிஜென் சோதனைகளை மேற்கொண்டனர்.
அங்கு 20 தொழிலாளர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1200 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் 474 பேர் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.