இலங்கையில் பதிவாகியுள்ள இரண்டாவது கொவிட் மரணம்
கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வாந்தி காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் -19 தொற்று உறுதி
இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
பின்னர், பெண்ணின் மூத்த சகோதரியும் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்கும் கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொவிட் -19 மரணம்
உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று(27) தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கடந்த (23) திகதி உயிரிழந்தார்.
குறித்த நபர் கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |