அவுஸ்திரேலியாவில் மீண்டும் தலை தூக்கும் கொவிட் மரணம்
அவுஸ்திரேலியாவில் கடந்த 10 மாதங்களின் பின்னர் முதல் முறையாக கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
சிட்னியைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் ஊடாக அவருக்கு தொற்று பரவியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 77 பேர் புதிததாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 52 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரான சிட்னியில் மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்று பரவிவருகின்ற நிலையில், முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 57 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளதுடன், கடந்த 10 மாதங்களில் முதலாவது மரணம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் Gladys Berejiklian கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று உள்ளதை விட இன்னும் சில நாட்களில் மிகவும் மோசமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 911 பேர் உயிரிழந்துள்ளதுடன், 31 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்