சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் கோட்டாபய வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ( Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தை மையப்படுத்தி, நேற்றைய தினம் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அரச தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மை மற்றும் ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள நிகழ்தகவு போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய அரச தலைவர், அனைத்து இடங்களிலுமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதே, இந்தத் தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள ஒரே வழியென்றும் சர்வதேச அரச தலைவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார்.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹிட் மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆகியோர், கொவிட் தடுப்பூசி ஏற்றலிலுள்ள முக்கியத்துவம் மற்றும் இது விடயத்தில் பல்வேறு நாடுகள் செயற்பட்ட விதம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவாதத்தின் முதல் சுற்றின் போது, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், தரம், குறைந்தளவு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அதிகளவில் விநியோகித்தல், விநியோக விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் விநியோக முன்னறிவிப்பை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
விவாதத்தின் இரண்டாம் சுற்றின் போது, தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதோடு, உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
