முல்லைத்தீவில் தடுப்பூசிகளை பெறுவதில் மக்கள் ஆர்வம் - நாளை ஐயன்கன்குளத்தில்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா, மல்லாவி, ஒட்டுசுட்டான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் கீழ் நேற்று(04) வரை 42 254 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் மக்களுக்கான முதற்கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கரைதுறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11437 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11688 பேருக்கும், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6996 பேருக்கும், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5276 பேருக்கும், வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6857 பேருக்குமாக மொத்தமாக 42 254 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினமும்(05) வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாலிநகர் பாடசாலையிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசிகளை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை (06) மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐயன்கன்குளம் பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


