கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா
கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘CRICKET FIESTA 2026’ மாபெரும் கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
2028ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள பாடசாலையின் நூற்றாண்டு விழாவை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாக, பழைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களிடையே ஒற்றுமையையும் விளையாட்டுத் திறமையையும் மேம்படுத்தும் நோக்கில் இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (20.10.2026) கிண்ணியா நகர சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நூற்றாண்டு விழா
பாடசாலை அதிபர் ஏ.எம். முலவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பழைய மாணவர் சங்க செயலாளர் பி. ரீ. ரிப்னாஸ், போட்டி ஒருங்கிணைப்பாளர் ஒ. இம்தியாஸ், அணிகளின் பிரதிநிதிகள் மற்றும் அணித்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அதிபர் விளக்கமளித்தார்.
சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கு அமைவாக நடத்தப்படவுள்ள இத்தொடரில், 1983ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பழைய மாணவர்களைக் கொண்ட 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இப்போட்டிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தலா 8 ஓவர்களைக் கொண்ட லீக் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
மேலும், ஊடகவியலாளர் சந்திப்பின்போது போட்டியில் பங்கேற்கும் அணிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டதுடன், தொடரின் வெற்றியாளருக்கு வழங்கப்படவுள்ள மாபெரும் சாம்பியன் கிண்ணமும் திரைநீக்கம் செய்து அறிமுகப்படுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |