முல்லைத்தீவு விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் உயிர்கொடை: மறுவாழ்வு பெற்ற இரு நோயாளிகள்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த 53 வயதுடைய தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த உறுப்பு தானத்தின் மூலம், இரு நோயாளிகளுக்கும் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த தாய், கடந்த 15ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
வவுனியா வைத்தியசாலை
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், ஆரம்ப சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக தீவிர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைகளும் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இரு நோயாளிகளுக்கும் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு, புதிய வாழ்வுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்து, மறுபுறத்தில் இரு நோயாளிகளுக்கு மறுவாழ்வுக்கான நம்பிக்கையை வழங்கியுள்ளது.
உயிரிழந்த பின்னரும் இருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய குறித்த தாயின் உறுப்பு தானம், மனிதநேயத்தின் உயரிய அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.
அத்துடன், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் மேலும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |