ரொஷான் ரணசிங்க 2022ஆம் ஆண்டிலேயே எடுத்த முடிவு! பகிரங்கப்படுத்தும் மொட்டு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே, பொதுஜன பெரமுனவுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு எதுவும் செய்ய முடியாதென கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து, ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் தரப்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கோட்டாபய ராஜபக்ச
இந்த நிலையில், தமது கட்சிக்கும் ரொஷான் ரணசிங்கவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது, அவர் பொதுஜன பெரமுனவுடனான தொடர்பை துண்டித்திருந்ததாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஒரு வருடத்தும் மேலான காலப்பகுதிக்குள் அவர் கட்சியில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவது அமைச்சரவை அமைச்சர்
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது, கோட்டாபய ராஜபக்சவின் வீடு தாக்கப்பட்டதையடுத்து, ரொஷான் ரணசிங்க பொதுஜன பெரமுனவுடனான தொடர்பை துண்டித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பின்னணியில், அவரது பதவி நீக்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன தலையிட்டு, ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்குமென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எதிர்ப்பார்க்க கூடாதென அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்ட முதலாவது அமைச்சரவை அமைச்சர் ரொஷான் ரணசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.