சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினால் தற்போது சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா (K.V. Thavarasa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில், கடந்த காலத்தில் இருந்த மிக மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டம்தொடரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சட்டத்தரணி தவராசா குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பதாகவும், எனினும் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான சூழல் இல்லாத நிலையில், திருத்தத்தில் காணப்படும் சாதகமான அம்சங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
42 ஆண்டுகால பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும், என்ன காரணத்திற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டதோ அது 2009இல் முடிவடைந்தும் இது நீக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஒருமித்த கருத்துக்கும் அரசியலமைப்பின் பல விதிகளுக்கும் முரணான இந்தச் சட்டத்தை இந்த அரசு சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் இப்போது தமிழ் பேசும் இனத்திற்கு எதிராக பாயும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி நடைபெற்று வரும் கையெழுத்துப் போராட்டம் வரவேற்கத்தக்கது எனவும், எனினும் தற்போதைய சூழலில் இந்தச் சட்டம் மீளப்பெறப்படுமா என்பது கேள்விக்குறியே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருத்தத்தின் ஊடாக தடுப்புக் காவல் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ள விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியுடன் மாத்திரமே நீதிமன்றப் பிணையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், எனினும் தற்போதைய திருத்தத்தின் படி மேல் நீதிமன்றத்திற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் பிணை வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வழக்கு விசாரணைகள் நாளாந்தம் நடத்தப்பட வேண்டுமென்ற விடயமும் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் வெற்றிபெறும் பட்சத்தில் இந்த வாய்ப்புகள் இல்லாமல்போகும் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.
