ஆவா குழுத் தலைவன் மீது வாள்வெட்டு
வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டு
ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறினர்.
10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல்
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்று நண்பகல் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆவா வினோதன் என்பவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த வினோதன் என்பவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐவர் காவல்துறையினரால் கைது
தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனி குழுவுக்கும் ஆவா குழுவுக்கும் இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் கூறினர்.
