தொல்லியல் உலகை அதிரவைக்கும் கண்டுபிடிப்பு: மலையுச்சியில் புதைந்திருந்த மர்ம நகரம்
பெரு நாட்டின் வடக்கு பரங்கா மாகாணத்தில், சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான வர்த்தக நகரமான “பெனிகோ (Peñico)” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம், பசுபிக் கடற்கரை, ஆண்டீஸ் மலைத்தொடர் மற்றும் அமேசான் காட்டுப் பகுதிகளை இணைக்கும் முக்கிய வர்த்தக மையமாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளில், சமுத்திர மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை தரிசு நிலத்தில் கட்டப்பட்ட மையக் கட்டடம் தென்படுவதுடன், கல் மற்றும் மண் கட்டிடங்கள் இருந்ததற்கான தடயங்கள் தெளிவாக காணப்படுகின்றன.
கரால் நாகரிகம்
இதன்படி, பெனிகோ நகரம் கிமு 1800 முதல் 1500 வரை தோன்றியதாக நம்பப்படுகிறது. இது, அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிக கரால் (Caral) நகரத்துடன் நெருக்கமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆராய்ச்சி குழு தலைவர் ரூத் ஷாடி (Ruth Shady), “இந்த நகரம், கரால் நாகரிகம் காலநிலை மாற்றத்தால் வீழ்ந்த பிறகு தோன்றியதாக நம்பப்படுகிறது. வர்த்தக தொடர்புகளுக்காக இவை மிக முக்கியமான இடத்தில் இருந்தன.” என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பெனிகோ நகரம், கரால் நாகரிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுவதாக பெரு கலாசார அமைச்சக ஆய்வாளர் Marco Machacuay தெரிவித்துள்ளார்.
18 கட்டிடங்கள்
இந்த நிலையல், 8 ஆண்டுகள் ஆய்வுகளுக்குப் பிறகு, ஆராய்ச்சியாளர்கள் பெனிகோ நகரத்தில் 18 கட்டிடங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றுள், பூஜை ஆலயங்கள், குடியிருப்பு வளாகங்கள், சிற்ப சுவரோவியங்கள் கொண்ட மையச் சதுக்கம், புடுடு (கடற்கழல் ஊதுவாயி) ஒலிக்கான சிற்பங்கள், மண்ணால் உருவாக்கப்பட்ட மனித மற்றும் விலங்கு சிலைகள், கடல் முத்துகள், மணிமுத்துகள் கொண்ட அணிகலன்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இதேவேளை, இந்த கண்டுபிடிப்பு, பெருவின் உலக அரங்கில் உள்ள மாச்சூ பிச்சூ (Machu Picchu) மற்றும் நாஸ்கா கோடுகள் (Nazca Lines) போன்ற தொல்பொருள் முக்கியத்துவங்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இது, பெருவின் தொன்ம நாகரிக மரபை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், குறித்த புதுக் கண்டுபிடிப்பு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க வர்த்தக வரலாற்றை புரிந்து கொள்ள புதிய தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
