கட்சியின் முடிவால் சிறீதரன் வெளியேற வாய்ப்பில்லை! சி.வி.கே.சிவஞானம் பகிரங்கம்
தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (18.02.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,“தற்போது கடந்த காலங்களைப் போலல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தமிழ் அரசியல் புலம் சார்ந்த கட்சிகள் கைப்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்த நிலையில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் கொள்கைகள் பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு ஒன்றிணைவது அவசியமாகும்.
இதில் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து போராளிக் கட்சிகளும் அடங்குவதாக இருக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் கருத்தாடல்களை கட்சிகளின் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் களம்
அதேநேரம், தற்போது அனைவரும் ஒருமித்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுள்ளன. அது நிறைவுற்ற பின்னரே தேர்தலில் தற்போதைய களச் சூழலுக்கேற்ப எவ்வாறு ஒரே நிலைப்பாட்டுடன் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க முடியும்.
அது மட்டுமல்லாது கூட்டாக போட்டியிடுவதா? இரண்டு அல்லது மூன்று தரப்பாக வாக்குகள் சிதறாதவண்ணம் போட்டியிடுவதா? என்பது பற்றியும் அடைவை எட்ட முடியும்.
அத்துடன் தமிழ் தரப்பின் போட்டியாளர்கள் எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.
அந்தவகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
