இரவுக்குள் கரையை தாக்கும் மொந்தா புயல்! தமிழகத்திற்கு அடைமழை எச்சரிக்கை
சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தூரத்தில் மொந்தா புயலின் மையம் தற்போது அமைந்துள்ளதாகவும், அது நாளை (ஒக். 28) மாலை முதல் இரவுக்குள் கரையைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்று, தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 480 கிமீ தொலைவில் உள்ளது.
இரவுக்குள் கரையை அடைய வாய்ப்பு
இது காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கிமீ, விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 560 கிமீ மற்றும் போர்ட் பிளேரிலிருந்து மேற்கே 890 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இதன்போது, மொந்தா புயல் மணிக்கு சுமார் 17 கிமீ வேகத்தில் நகர்கிறது.
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிர புயலாக வலுப்பெற்று, மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையிலான ஆந்திரக் கடலோரப் பகுதியில், காக்கிநாடா அருகே மாலை முதல் இரவுக்குள் கரையை அடைய வாய்ப்புள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90–100 கிமீ வரை, சில சமயங்களில் 110 கிமீ வரை வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கான எச்சரிக்கை
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒக்டோபர் 1 முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை சாதாரணத்தை விட 57% அதிகமாகப் பெய்துள்ளது. வழக்கமாக 144 மில்லிமீற்றர் மழை பதிவாகும் நிலையில், இவ்வாண்டு இதுவரை 227 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.
மாநிலத்தின் 18 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்