பௌத்த மத அவமதிப்பு - நீதிமன்றின் தீர்ப்பு!
தலதா மாளிகையை அவமதித்தமைக்காக கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மன்னிப்புக் கோரியதை தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழக்கை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளது.
அதனையடுத்து இன்று அவர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளார்.
தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவமதித்தமை தொடர்பில் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று நீதவான் பிரசன்ன அல்விஸால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் முக்கிய பௌத்த ஸ்தலமான தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க கடந்த மாதம் 5 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், வழக்கை முடிக்க தயாராக இருப்பதாக முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவு
இதனையடுத்து, பௌத்த தகவல் நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த அகுருவெல்லே ஜின்னாநந்த தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சமூகத்திடம் அவர் தனது தவறுக்காக மன்னிப்புக் கோரினார்.
இதனை கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், அவரை விடுவித்து குறித்த வழக்கை முடிவு செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
