தமிழர் பகுதியில் அதிகரிக்கும் ஆள்துளை கிணறுகள்! நிலத்தடி நீர் ஆபத்தில்
வவுனியாவில் அதிகமான ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுவருவதால் மாவட்டத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாக சூழயியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் அண்மையநாட்களாக ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கும் செயற்ப்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக புலம் பெயர்ந்துவசிக்கும் வெளிநாட்டவர்களின் நிதி உதவிகளில் இவ்வாறான அதிகமான கிணறுகள் அடிக்கப்பட்டு வருகின்றது.
ஆள்துளை கிணறுகள்
இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடிநீரின் தன்மை மோசமடையும் நிலை ஏற்படும் என சூழலியலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் புலம்பெயர் நாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்துள்ள நபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் நிதி உதவியின் கீழ்100 ஆழ்துளை குழாய்கிணறுகளை குறிப்பிட சில நாட்களுக்குள் அடித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் கிணறுகளை அமைப்பதற்கு நிதி உதவி அளித்தவர்களை வாழ்த்தியும் பாரிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நிலத்தடி நீர்
எனவே ஆழ்துளை கிணறுகளை அமைப்பதனால் ஏற்ப்படும் எதிர்கால அபாயங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளாமல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதி உதவிகளை வழங்குவது பொருத்தமானதல்ல என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளை தொடர்புடைய அரச திணைக்களங்கள் கண்காணிப்பதில்லை.
இதனால் உரிய அறிவுறுத்தல்கள் இன்றி பல கிணறுகள் அமைக்கப்படுகின்றது.
எனவே இந்த விடயத்தில் பிரதேசசெயலகம், மற்றும் நீர் வளச்சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியன தலையிட்டு அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதுடன் நீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு உரியமுறையில் நீரினை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |