மாமியாரிடம் 15 இலட்சத்தை திருடிய மருமகள் கைது
கணவரின் தாயாரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவை திருடிய மருமகள் திருடப்பட்ட பணத்தில் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அநுராதபுரம் வன்னியன் குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் மகன் கைது
முறைப்பாட்டாளரின் மகன் அண்மையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதாகவும் அவர் தனது மகள் மற்றும் மகனின் மனைவியுடன் இரண்டு மாடி வீட்டில் வசித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கார் விற்பனை செய்த 10 இலட்சம் ரூபாயும், குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி விற்பனையில் கிடைத்த 5 இலட்சம் ரூபாய் உட்பட 15 இலட்சம் ரூபாயை வீட்டின் மாடி அறையில் உள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் திருடிச் சென்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுக்குச் சென்ற காவல்துறை
கடந்த 27ஆம் திகதி, போதைப்பொருள் உள்ளதா என பரிசோதிக்க விசேட காவல்துறை குழு வீட்டுக்குச் சென்றபோது, முறைப்பாட்டாளர் காவல்துறையினருடன் அறையொன்றிற்குச் சென்று, காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இருந்த அலுமாரியை திறக்கும் போது, பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இந்த முறைப்பாட்டின் ஆரம்பகட்ட விசாரணையில் இது பொய்யான முறைப்பாடு என சந்தேகிக்கப்பட்டதாகவும், மேலதிக விசாரணையின் பின்னர் இது உண்மை முறைப்பாடு என உறுதி செய்யப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பணம்
திருடப்பட்ட பணத்தில் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் சந்தேகநபரின் சகோதரி ஒருவரிடம் காணப்பட்டதாகவும், மீதிப் பணத்துடன் சந்தேகநபரின் தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் சகோதரி மற்றும் தந்தையை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.