உயிரிழந்து கரை ஒதுங்கிய ஆமைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்படும்?
கொழும்பு துறை முகத்திற்கு வெளியே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப் பற்றி மூழ்கியதை அடுத்து அதனாலேற்பட்ட தாக்கம் காரணமாக இலங்கை கடற்ரைகளில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 20 இற்கும் மேற்பட்ட கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. நேற்று முன்தினமும் மன்னார் கடற்கரையில் இரண்டு ஆமைகள் கடும் காயங்களுடன் கரை ஒதுங்கிய நிலையில் பின்னர் அதிலொன்று உயிரிழந்து விட்டது.
இந்தநிலையில் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய கடலாமைகளின் உடல்கள் சிங்கப்பூருக்கு விசாரணைக்காக எடுத்துச்செல்லப்படவுள்ளன. இந்த தகவலை வனஜீவராசிகள் அமைச்சு இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை கடந்த சில தினங்களாக நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீட்கப்பட்ட கடலாமை உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கள் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனைகளூடாக கடல்வாழ் உயிரிழனங்கள் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் குறித்து கண்டறிய முடியும் என அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா தெரிவித்தார்.
இதனை தவிர கப்பல் தீப்பற்றிய போது ஏற்பட்ட இரசாயன கசிவினால் கடல் நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கடல் நீரின் தரம் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.