வாகனத்தில் பயணம் செய்த இருவர் திடீர் மரணம் - மன்னாரில் சம்பவம்
மன்னாரில் இருவர் திடீர் மரணம்
மன்னாரில் திடீரென உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை (30) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (30) இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து, அதில் பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டது.
உடனடியாக குறித்த வாகனம் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு வந்தபோது குறித்த இரு குடும்பஸ்தர்களும் வாகனத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.
மேலும் குறித்த வாகனத்தில் வந்த இருவரும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியைச் சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
யாழ். போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு
தற்போது உயிரிழந்த குடும்பஸ்தர்களின் சடலங்கள் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

