மூங்கிலாறு சிறுமியின் மர்ம மரணம் ! தாய், தந்தை உள்ளிட்ட ஐவரது விளக்கமறியல் நீடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15-02-2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்களுக்கு இன்று 01.02.2022 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15-02-2022 வரை நீடித்து அன்றைய தினத்துக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
கடந்த 13-12-2021 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த சிறுமி , கொலை செய்யப்பட்ட நிலையில் 18-12-2021 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படாத நிலையில் கணொளி ஊடாக இந்த வழக்கினை விசாரித்த நீதவான் வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் எதிர்வரும் 15.02.2022 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
