சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரணதண்டனை விதிப்பு
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட மூவருக்கு உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாத் இல்லாத நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு
பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.

பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றில் முன்னிலை
மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால அரசு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |