அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து : 16 பேர் நீரில் மூழ்கி பலி
கிரீசில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரீஸ் நாட்டின் பரோஸ் தீவில் ஏஜியன் கடலில் நேற்று பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 100 அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த கிரீஸ் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் 3 பெண்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 16 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இன்னும் சிலர் காணாமல் போனதுடன் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.