300 ஐத் தாண்டிய உயிரிழப்புகள்: மேலும் அதிகரிக்கும் அபாயம்!
புதிய இணைப்பு
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.
309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகபட்சமாக 88 மரணங்கள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 68 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலில் 35 பேரும் அனர்த்தம் காரணமாக இதுவரை காணாமல் போயுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இதுவரையில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அதன்படி, சீரற்ற வானிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி 228 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30.11.2025) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு
குறித்த அறிக்கையின் படி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 1,47,931 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் அதிகாரிகளால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |