இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!
இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது குறித்து கலந்துரையாட பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குறித்த விவாதமானது எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு நாடாளுமன்றின் வெஸ்ட் மினிட்டர் அரங்கத்தில் (Westminster Hall) நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தின் போது,இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
தடைசெய்யும் முயற்சிக்கு
மேலும், பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும், சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் போராட்டத்தினையும் முன்னெடுத்து வருகின்றர்.
கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பு சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.
பின்னர், 2021ஆம் ஆண்டின் மே மற்றும் யூன் மாதங்களில், இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரினதும் முயற்சியின் விளைவாக பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பின்கள் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யுமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய காணொளி ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த அயராத முயற்சியின் அடுத்த கட்ட முன்னேற்றமாக, தற்போது தழிழருக்கான பிரித்தானிய அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவரான எலியட் கொல்பேர்ண் இன் உதவியுடன், இந்த நாடாளுமன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தடைப்பட்டியல்
சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய எதிர்வரும் 10ஆம் திகதியன்று பிரித்தானியா தனது புதிய தடைப்பட்டியலை அறிவிக்கவுள்ள நிலையில் இந்த நாடாளுமன்ற விவாதம் மிகமுக்கிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தத்தமது பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துமாறு அவசர கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கான மாதிரி கடிதம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.