2027 வரவு செலவுத் திட்டம் : இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.
2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி வாக்கெடுப்பு
இதனையடுத்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த, சனிக்கிழமைகள் உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் முற்பகல் 9.30 மணிக்கு இந்த வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்காக நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அத்துடன் விவாதத்தின் முடிவில் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |