திருமணத்திற்கான அனுமதி என்பது அருவருக்கத்தக்க செயல்! இலங்கை அரசின் முடிவுக்கு கண்டனம்
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான்தோன்றித்தனமானது என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிரும் ஒன்று வெளியிட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இவ்வாறாக இருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என்பதுடன் அருவருக்கத்தக்க செயலாகும். நாகரிமான ஒரு அரசாங்கம் ஒருபோதும் பிரஜைகளின் முக்கியமான தனிப்பட்ட சுதந்திரத்துக்கு சட்டம் இயற்றுவதில்லை.
அரச நிர்வாகம் என்பது அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, குடும்பங்களின் சாதாரண நிலைமைக்கு சட்டம் அமைக்கும் செயற்பாடு அல்ல.
இலங்கையில் திருமணம் முடிக்கும் சுதந்திரத்துக்கு ஏற்றவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய வரையறையானது இலங்கை பிரஜைகளை இரண்டு முறைகளில் நடத்துவதற்கான அடித்தளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.