தேசவிடுதலைக்காய் தம்முயிர் தந்தோரைப் பூசிக்கும் மாவீரர் வாரம் ஆரம்பம்…
தமிழ் ஈழ மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் பெரும் தாக்கம் செலுத்தும் கார்த்திகை மாதம், தமிழர் தேசத்தில் இருந்து பல்வேறு செய்திகளையும் சொல்லுமொரு காலமாகிறது.
கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனேயே மாவீரர்களின் நினைவில் ஈழத் தமிழ் நிலம் கனக்கத் துவங்கியது. மாவீரர்கள் ஈழத் தமிழ் தாகத்துடன் தம்மை ஈர்ந்த விடுதலை விதைகள். அந்த விடுதலை விதைகளால் நிறைக்கப்பட்டது எம் நிலம்.
இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இன உரிமைகளை வேண்டியும் எங்கள் களமாடி மாண்ட மாசற்ற மறவர்களின் நினைவில் ஈழத் தமிழ் இனம் இருக்கும் கார்த்திகை மாத்தில், எம் தேசமெங்கும் கல்லறைகள் விழிதிறந்து தம் கனவுகளை தாகத்தோடு எடுத்துரைக்கும்.
மாவீரர் வாரம் ஆரம்பம் ஈழத் தமிழ் தேசத்தில் நேற்றைய தினம், நவம்பர் 21இலிருந்து மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
அத்துடன் கடந்த சில நாட்களாக மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளும் ஈழத் தமிழ் தாயகம் எங்கும் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய நாள் கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு செல்லுமொரு வாய்ப்பு கிடைத்தது.
வீதியில் மாவீர்ர்களை நினைவுகொள்ளும் பெரியதொரு பதாகை எங்கள் தேச எழுச்சியை வெளிப்படுத்தியது. அங்கு வந்திருந்த ஒவ்வொரு தாய்மார்களதும், தந்தையர்களதும் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீரம் தெரியும் அந்த முகங்களில் ஈரமும் தெரிகிறது. தியாகம் தெரியும் அந்த முகங்களில் சோகமும் தெரிகிறது. ஈழ விடுதலைக்காய் தம் பிள்ளைகளை ஈர்ந்த அந்த முகங்களில் இருந்து எண்ணற்ற சேதிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்த போது கொண்டிருந்த கனவுகள் எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் அந்தப் பிள்ளைகள் எல்லாவற்றையும் துறந்து தேச விடுதலை என்ற புனித இலட்சியம் நோக்கிப் பயணம் செய்தார்கள்.
புலிச் சீருடை அணிந்து, கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து துப்பாக்கி ஏந்தி, ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலையே மூச்சென தலைவன் காட்டி பாதையே தீர்வென தம் பயணத்தை மேற்கொண்டார்கள்.
அத்தகைய பிள்ளைகளின் நினைவுகளில் மூட்டிய தேசமாக ஈழத் தமிழ் தேசம் இருக்கிறது. மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பில் நாம் மட்டுமல்ல, இலங்கை அரசும் சிங்கள மக்களும் மாவீரர் பெற்றோரின் முகங்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் பல செய்திகளை அவர்கள் பெற முடியும்.
விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் துயிலும் இல்லங்கள் நவம்பர் 27 மாவீரர் நாள். அந் நாளை முன்னிட்டு தமிழர் தேசத்தின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன.
ஈழத் தமிழ் தேச மக்கள்
ஈழத் தமிழ் தேச மக்கள் திரண்டு எம் விடுதலைக்காய் களமாடி மாண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக ஈழத் தமிழ் தேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இது இலங்கை அரசுக்கும் அதன் படைகளுக்கும் பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவே செய்திகள் வாயிலாக உணர முடிகின்றது. மாவீரர் நாள் வருகிறது என்றவுடன் அரசுக்கும் படைகளுக்கும் இக் காய்ச்சல் வருடம் தோறும் ஏற்படுகிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
உயிரிழந்த மக்களை நினைவுகூரும் உரிமை தமிழ் மக்களுக்க உள்ளது என்றபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர இடமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிமல் ரத்னாயக்கா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஈழத் தமிழ் மக்களின் பிள்ளைகள், உறவுகள். அவர்கள் ஈழ மக்களிலிருந்து அடக்குமுறையை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட விடுதலை வீரர்கள்.
அவர்களை நினைவுகொள்ளுகின்ற உரிமை தமிழ் மக்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த அரசு கடந்த காலத்தில் ரணிலைப் போல, மகிந்தவைப் போல இரட்டை வேடமிடுகிறது.
வடக்கில் நிற்கும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இன்னமும் அது நடக்கவில்லை. அத்துடன் பிமல் ரத்னாயக்கா இப்பிடிப் பேசுகிறார்.
மாவீரர்களை வணங்கும் சிங்களவர்கள் அத்துடன் தாம் இறந்த ஜேவிபி உறுப்பினர்களுக்காக நினைவுத்தூபி கட்டவில்லை என்றும் மனங்களில் வைத்து வழிபடுவதாகவும் பிமல் ரத்னாயக்கா கூறினார்.
ஆனால் மாவீர்ர் துயிலும் இல்லம் என்பது எங்களுக்குக் கோயில். அது எமது பண்பாடு. எம் பண்பாட்டு உரிமையை அடக்கவும் அழிக்கவும் ஒடுக்கவும் அரசு முயலக்கூடாது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் இந்தப் பண்பாட்டை உணரத் தொடங்கியுள்ளனர். மாவீரர் நாள் மற்றும் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சிங்கள மக்களும் நினைவுகொள்ளுகிற காலம் இது.
சிங்கள நண்பர்கள், உறவுகள் பலரும் மாவீரர் நாள் பற்றியும் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள்.
வரும் காலத்தில் இன்னமும் இதில் முன்னேற்றம் வரும் என்றார்கள். சிங்கள மக்கள் எங்களை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படை.
மாவீரர் தினத்தின் வெளிப்பாடும் பண்பாடும் இன்னமும் ஸ்ரீலங்கா அரசால் உணரப்பட முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தெற்கில் உள்ள சிங்கள இளைஞர்களும் முற்போக்கு சக்திகளும் இதனை உணரத் துவங்கி விட்டார்கள்.
கடந்த ஆண்டு முன்பு தென்னிலங்கையில் இருந்து கிளிநொச்சி வந்த சில சிங்கள இளைஞர்கள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல விரும்பினார்கள்.
அங்கு சென்றதும் கால்களை மடக்கிப் பணிந்து மாவீரர்களின் உடைந்த கல்லறைகளுடன் பேசத் துவங்கினார்கள்.
“எந்த நிலத்திற்காக போராடினீர்களோ அந்த நிலத்தில் உங்கள் தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கைகள், உறவுகள் நினைவுகூர முடியாத அளவில் இருக்கிறார்கள்.
உங்களுக்கான தீபத்தை உங்கள் சகோதரர்களான நாங்கள் தெற்கில் ஏற்றுவோம். இந்த அரசால் இராணுவத்தால் என்ன செய்ய முடியும்?...” என்று அவர்கள் மனம் விட்டு பேசிய தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் புரிதலும் உணர்வும் எல்லா சிங்கள மக்கள் இடத்திலும் ஏற்படும் எனில் ஈழத் தமிழ்கள்மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு வருமென எண்ணிக் கொண்டேன்.
ஈழத் தமிழ் மக்களின் விடுதலை தாகத்தை மாவீர்ர்கள் இந்த உலகின் முன் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
எந்த நிலையிலும் ஈழத் தமிழ் மக்கள் மாவீர்ர் தினத்தைக் கொண்டாடுவது என்பதும் ஈழ மக்களின் விடுதலைத் தாகத்தின் வெளிப்பாடாகும். இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கும் ஈழ நிலத்தில் நவம்பர் 27ஆம் நாளன்று எரியும் தீபங்கள் ஈழ வரைபடமாய் எங்கள் இனவிடுதலைத் தாகத்தை எடுத்துரைக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 November, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தேசவிடுதலைக்காய் தம்முயிர் தந்தோரைப் பூசிக்கும் மாவீரர் வாரம் ஆரம்பம்… 18 நிமிடங்கள் முன்