NPP அரசின் மீது சந்தேகத்தை கிளப்பும் செல்வம் எம்.பி.
தேர்தலை காலந்தாழ்த்துவதற்கான யுக்திகளை அரசாங்கம் கையாழுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) புதன்கிழமை நடைபெற்ற துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பான குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.
குழுக்களினூடாக அறிக்கைகள்
ஒவ்வொரு அரசாங்கங்களும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இதுபோன்ற குழுவை அமைப்பது வழக்கமானது. இவ்வாறான குழுக்களினூடாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதானது காலத்தை கடத்தும் செயற்பாடாகவே இருக்கும்.

கடந்த கால வரலாறுகளில் இதனைப் பார்த்துள்ளோம். ஆனால், இப்போதுள்ள அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவை அமைத்துள்ளது. இது எங்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மாகாண சபைகள் தேர்தலை காலம் கடத்துகின்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.
மாகாண சபை தேர்தல்
அமைச்சர்களும் அரசாங்கமும் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவோம் என்று கூறிவந்த நிலையில் தற்போது அமைக்கப்படும் குழுவானது அந்தத் தேர்தலை காலம் கடத்துவதற்கானதா என்ற கேள்விகள் எழுகின்றன.

எவ்வாறாயினும், உடனடியாக பழைய முறையில் தேர்தலை நடத்தி அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டுமே ஒழிய, தேர்தலை பின்போடுவதற்கான யுக்தியாக இவ்வாறான குழுக்களை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து காலம் கடத்தும் வகையில் நடக்க வேண்டாம் என்று கோருகின்றேன்.
இப்போது மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற காலகட்டத்திலேயே இருக்கின்றோம். இதனால் உடனடியாக தேர்தலை நடத்த முயற்சிகளை எடுக்கவேண்டும்.
புதிய அரசியலமைப்பு
இதனை விடுத்து குழுக்களை அமைத்து காலத்தை கடத்தி, அதனை அப்படியே கைவிடக்கூடாது.

புதிய அரசியலமைப்பு எழுதப்படவுள்ள நிலையில், இந்த மாகாண சபைகள் முறைமைகள் இல்லாமல் செய்யப்படப் போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றேன்.
புதிய அரசியலமைப்பு எழுதப்படும்போது தமிழ்த் தரப்புகளையும் இணைத்து, தமிழ் மக்கள் விரும்புகின்ற வகையில் அதனை எழுதும் வாய்ப்பை அரசாங்கம் செய்யவேண்டும்.
இதுவே ஜனநாயக மற்றும் நேர்மைத் தன்மையாக இருக்கும். அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை பின்போடும் யுக்திகளை அரசாங்கம் கையாளக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 23 மணி நேரம் முன்