மன்னார் நீர் வழங்கல் காரியாலயத்தின் திடீர் முடிவால் மக்கள் அவதி!
மன்னார் மாவட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் காரியாலயத்தில், நுகர்வோர் தங்களது தண்ணீர் கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்கான வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் மன்னார் நீர் வழங்கல் காரியாலயத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று இலகுவாகப் பணம் செலுத்தும் வகையில் விசேட வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் தூர இடங்களிலிருந்து வரும் மக்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த நன்மையடைந்தனர். எனினும், ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த வசதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டணப் பட்டியல்
தற்போது ஜனவரி மாதத்திற்கான கட்டணப் பட்டியல்கள் (Bills) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் மீண்டும் வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் கட்டணம் செலுத்தும்போது மேலதிகமாக ஒரு தொகையை (Commission) மக்கள் செலுத்த வேண்டியுள்ளது.
வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் நிலவும் நீண்ட வரிசையினால் மக்களின் நேரமும் உழைப்பும் வீணாகின்றது. தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் மக்கள் இதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான காரணங்களால் நீர் வழங்கல் காரியாலயத்திலேயே நிரந்தரமான ஒரு காசாளரை (Cashier) நியமித்து, மக்கள் தங்களது கட்டணங்களை எவ்வித சிரமமுமின்றி நேரடியாகச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் உடனடியாகச் செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணப் பட்டியல் விநியோகம் முழுமையடையும் முன்னர் இந்த வசதியை மீண்டும் அமுல்படுத்தினால், நுகர்வோர் அபராதத் தொகையின்றி உரிய நேரத்தில் கட்டணங்களைச் செலுத்த ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 23 மணி நேரம் முன்