திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்…
திருகோணமலை கடற்கரையில் 2006-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவம் ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வடுவாகவும், சர்வதேச அளவில் நீதி மறுக்கப்பட்டதற்கான முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது.
பின்னணி மற்றும் சம்பவம்
2006-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி மாலை, திருகோணமலை டொக்யார்ட் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஏழு மாணவர்கள் ஒன்றுகூடி உரையாடிக்கொண்டிருந்தனர்.
அந்தச் சமயம் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் (STF), அந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
முதலில் அவர்கள் மீது கைக்குண்டு எறியப்பட்டது, பின்னர் அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு மிக அருகாமையில் வைத்து தலையிலும் நெஞ்சிலும் சுடப்பட்டனர்.
இந்தத் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள்:
மனோகரன் ரஜீகர்
யோகராஜா ஹேமச்சந்திரா
லோகிதராஜா ரோகன்
தங்கத்துரை சிவானந்தா
சண்முகராஜா கஜேந்திரன்
இந்தச் சம்பவத்தில் யோகராஜா பூங்குழலோன் மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகிய இரு மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்த உடனேயே, இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வீசிய குண்டுகள் தவறுதலாக வெடித்ததாலேயே உயிரிழந்தனர் என்றும் அரசால் முதலில் கூறப்பட்டது.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இப்படுகொலையை அரசும் படையும் திட்டமிட்டுச்செய்தது என்பது வெளிப்படையான உண்மை.
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் பெரிது, இந்தப் படுகொலை வழக்கில் கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழ் மக்களின் படுகொலைக்கு என்றுதான் நீதி கிடைத்திருக்கிறது? திருமலை ஐந்து மாணவர் படுகொலை விடயத்திலும் அதுதான் நிகழந்தேறியது.
சுகரிதராஜன் படுகொலை
ஈழத்தின் கிழக்கில் இனப்படுகொலைப் போர் சூழ்ந்த வருடம் அது. 2006ஆம் ஆண்டு சனவரி 02ஆம் நாளன்று திருகோணமலையை மாத்திரமின்றி ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் அசைத்தது திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை.
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருகோணமலையில் இருந்து ஐந்து மாணவர் படுகொலை குறித்த செய்திகளை திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜன் வெளிக்கொணர்ந்தார்.
இதற்குச் சில நாட்களின் பின்னர் அதாவது 2006 சனவரி 24 இல் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பிலான ஆதாரங்களை இவர் வெளியிட்டமையால்தான் படுகொலை செய்யப்பட்டார் என்று அப்போதே சந்தேகிக்கப்பட்டது. மிக முக்கியமாக ஐந்த மாணவர் படுகொலை குறித்த நிழல்படங்களை இவரே பதிவு செய்தார்.
போராடிய மனோகரன்
இந்தக் கொலைகளுக்கு நீதி கோரி கொல்லப்பட்ட மாணவர் ரஜீகரின் தந்தை வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் அவர்கள் சர்வதேச அளவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஆனால், 2019-ஆம் ஆண்டு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட 13 பாதுகாப்புப் படை வீரர்களும் விடுவிக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் நீதிக்காகப் போராடிய மருத்துவர் மனோகரன் அவர்கள், கடந்த செப்டம்பர் 21, 2025 அன்று தனது 84-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு "திருமலை 5" (Trinco 5) படுகொலை வழக்கு எனப்படுகிறது. இந்த வழக்கு இலங்கையில் நிலவும் அடக்குமுறையை உலகுக்கு உணர்த்தும் ஒரு குறியீடாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2-ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் இந்த மாணவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய 20-ஆம் ஆண்டு நினைவுநாளில், உயிரிழந்த அந்த இளம் மலர்களுக்கு அகவணக்கத்தைச் செலுத்துவதோடு, காலம் கடந்தாவது அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |