ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொத்துக்களை ஏலம் விட தீர்மானம்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ.161 மில்லியனுக்கும் அதிக கடன்தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அவர்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளது.
இது குறித்து தெரியவருகையில்,
குருணாகல் பகுதியில் 'பெர்னாண்டோ அண்ட் கம்பனி' (Fernando & Company) என்ற பெயரில் வணிகம் செய்து வரும் ஜோன்ஸ்டன் சேவியர் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி மொரீன் பெட்ரிஷியா தெரேசா பெர்னாண்டோ ஆகியோர் தனியார் வங்கியில் பலமுறை கடன்களைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி வரையிலான கணக்கீட்டின்படி, இவர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை 161,105,833 ரூபா (161 மில்லியன் ரூபா) என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடனை மீட்க வங்கி நிர்வாகம் தீர்மானம்
இந்தக் கடனுக்காக வங்கியில் அடகு வைக்கப்பட்ட இவர்களுக்குச் சொந்தமான குருணாகல் மாவட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களை, உரிமம் பெற்ற ஏலதாரர் மூலம் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்து கடனை மீட்க வங்கி நிர்வாகம் உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொகுசு வாகன வழக்குத் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது முகநூல் பக்கத்தில் அவசர விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நீதிமன்றத்தில் என் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 3 குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட அந்த வாகனத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவோ, அதன் உரிமையாளர் நான் என்றோ அல்லது அதற்கான இறக்குமதி வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்ததாகவோ என் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |