திருகோணமலையில் பௌத்த பிக்கு அபகரித்த தமிழ் மக்களின் நிலத்தை மீட்க கோரிக்கை
திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை
விவசாயத்திற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில்,யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பிக்குவின் தலைமையின் கீழ் விவசாயம்
கடந்த 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்குரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின் கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்ளடங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |