நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம்
நிலாவெளி உல்லாசப் பிரயாணிகளின் படகு மற்றும் சேவை கூட்டுறவு சங்கத்தினரால் இன்று நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நிலாவெளி கடற்கரையில் இருந்து புறாமலைத்தீவிற்கு சுற்றுலாப் பயணிகளை கொண்டு செல்லும் படகு சேவையில் ஈடுபடும் குறித்த சங்கத்தின் அங்கத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்

குறித்த சங்கத்தில் அல்லாத ஒருவர் தனிப்பட்ட முறையில் இணையதளம் ஊடாக புறாமலைத் தீவினை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களது முன்பதிவினை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் படகு சேவையில் ஈடுபடுவதன் காரணமாக குறித்த சங்கத்தின் அங்கத்தவர்கள் பாதிப்படைவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
தமது சங்கத்தின் ஊடாக சுழற்சி முறையிலான பிரயாணத்தை தாம் மேற்கொள்வதாகவும் குறித்த தனிப்பட்ட நபர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து தடவைகள் பயணங்களை மேற்கொள்வதன் காரணமாக சுழற்சி முறையில் பயணத்தினை முன்னெடுக்கும் குறித்த சங்கத்தில் அங்கத்தவர்கள் பல வேலைகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குறித்த தனி நபரிடம் நாம் வினவிய போது சங்க அங்கத்துவம் பெற தாம் முயற்சித்த போதும் தமக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் பொது வேலை ஒன்றிற்கு சங்கம் என்ற போர்வையில் முட்டுக்கட்டை இடுவது பொருத்தமற்ற செயல் என தெரிவித்திருந்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் திருகோணமலை நிலாவெளியில் இருந்து புறாமலைத்தீவிற்கு செல்லும் படகு சேவை பல
மணி நேரம் தாமதமாகியதுடன் ஸ்தலத்திற்கு வருகைதந்த காவல்துறை அதிகாரிகளால் நிலமை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.