திருமலையில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் - வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்(photos)
திருகோணமலை நகர்ப்புற பகுதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்கள் இரவுவரை கிடைக்கப் பெறாததால் ஏமாற்றமடைந்து தபால் கந்தோர் வீதி சந்தியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் விநியோகத்துக்காக கொண்டுவரப்படும் சிலிண்டர்கள் அனைத்தும் ஒரு சில பகுதியில் வைத்து வழங்கப்படுவதன் காரணமாக ஒரு சில பொதுமக்களுக்கு மட்டும் அது கிடைக்கப்பெறுவதுடன் பலர் ஏமாற்றமடைகின்றனர்.
மேலும் ஒருசிலர் மாத்திரம் அவற்றினை வரிசையில் நின்று பெற்று அதனை கூடிய விலைக்கு விற்பனை செய்வதன் காரணமாக ஏனைய பொது மக்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கப் பெறாத நிலை காணப்படுகிறது
இதன் காரணமாக திருகோணமலை தபால் கந்தோர் வீதி சந்தையில் நான்கு பக்கமாகவும் சிலிண்டர்களை அடுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இதன்போது குறித்த சந்தியில் முஸ்லிம் சமூகத்தினர் வீதியின் நடுவில் அமர்ந்து தமது நோன்பு திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.









